தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. 

Advertisment

இந்நிலையில் 2 நாள் பயணமாகப் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபின், புதுச்சேரி முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின்  தலைவருமான ரங்கசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். முன்னதாக முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லம் அருகே உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இருவரும் கூட்டாக வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் அவரது இல்லத்தில் நித்தின் நபின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரிக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Advertisment

அதே சமயம் புதுச்சேரி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபினுடன் ஆலோசனை நடத்தியதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்குச் செய்தியாளர்களிடம் மழுப்பலாகப் பதிலளித்தார். அந்த பேட்டியில், “இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி. இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த என்.டி.ஏ. அரசு மூலமாகப் புதுச்சேரி மாநில மக்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்து சிறப்பான முறையில் செயல்படுத்த முடியுமோ அதனை இந்த அரசு செய்து கொண்டிருக்கும். நன்றி வணக்கம்” எனத் தெரிவித்தார். 

py-legilature

புதுச்சேரியில் பா.ஜ.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் மீண்டும் இதே கூட்டணியில் வரும் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க பாஜக விரும்புகிறது. ஆனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், ரங்கசாமி மறுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் இணக்கமாக ரங்கசாமி பேசவில்லை எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisment