நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதே போன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சக குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள். இந்த நாளில், ஜனநாயகம் திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் மதிக்கப்படும், பன்முகத்தன்மை நமது மிகப்பெரிய பலமாகப் போற்றப்படும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம். 

உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதாகும். அதாவது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட கொள்கைகளை நிலைநிறுத்துவது, இதன் மூலம் ஒவ்வொரு நபரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.