இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதன் பிறகு புதிய மாநிலச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான கூட்டம் சென்னை சூளைமேட்டில் இன்று (13.09.2025) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் டி. ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட 110 மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது மாநிலச் செயலாளர் தேர்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர், ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆவார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். ஏற்கனவே 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வந்தார். அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சியின் விதிப்படி மாநிலச் செயலாளர் பதவிக்கானவரை தேர்வு செய்ய 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநாடு நடக்கும்.
அதில் ஒருவருக்கு 3 முறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். அதன்படி 3 முறை முத்தரசன் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீரபாண்டியனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள். இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசனுக்கு நன்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.