ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேசத் தாய்மொழி நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாய் மொழி மற்றும் பண்பாட்டுப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும், அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். கடந்த 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) வங்க மொழியை அரசு மொழியாக அங்கீகரிக்கக் கோரி போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த மொழிப் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச தாய்மொழி நாள், உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று (21.02.2026) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் வைப் வித் எம்.கே. எஸ். சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பியான் என்பவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உங்களுக்குப் பிடித்த கவிதை எது என்று கேட்கிறார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புது நிலவே, அன்பே, அமுதே,அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, பனியே, கனியே, பழரச சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழைத் தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் கிடையாது என்று ஒரு கவிதை உள்ளது. இதனை மனப்பாடம் செய்து பல இடங்களில் நான் பேசி இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/21/mks-7-2026-02-21-10-28-26.jpg)
இந்த வரிகளைக் கொண்டு பாடகர்கள் பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழே நீ வாழ்ந்திடு. இன்று உலகத் தாய்மொழிகள் நாள். ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர் நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
அவர்களுக்கு என் நன்றி. நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, உலகத் தாய்மொழி நாளையொட்டி நேற்று (20.2.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை தலைவர் மு.அப்பாவு தலைமையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow Us