ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில், “ மழைக்காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
வீதிகள், குடிநீர், மின்சாரம். வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம். அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்படவேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது. எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்படவேண்டும். இந்தக் கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்கின்ற அரசு இது” எனப் பேசினார்.