தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் (30.1.2026 வெள்ளி, 31.1.2026 சனி) என இரண்டு நாள்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது மகாத்மா காந்தி, தோழர் ப. ஜீவா ஆகிய இருவரும் சந்தித்ததன் நினைவாக சிராவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சிலைகளுடன் கூடிய நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். கழனிவாசலில் வீறுகவி அரசர் முடியரசனார் சிலைக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள்களிலும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். அதன்படி இன்று (30.1.2026) திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் உத்தமர் காந்தியடிகள் தோழர் ப.ஜீவாவை சந்தித்துப் பேசியதன் நினைவாக, அங்கு அவர்களின் சிலைகளுடன் கட்டப்பட்டுள்ள நினைவு அரங்கத்தினைத் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து குன்றக்குடி ஊராட்சியில், தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உ திருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின்னர், காரைக்குடி வட்டம், கழனிவாசல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள வீறுகவியரசர் முடியரசனாரின் உருவச்சிலையினைத் திறந்து வைத்துச் சிறப்பிக்கிறார். நாளை (31.1.2026) கானாடுகாத்தான் பேரூராட்சியில் அமைந்துள்ள செட்டிநாடு வேளாண் கல்லூரி, காரைக்குடி வட்டம், கழனிவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரி ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 49 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரூ.205.06 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதனைத்தொடர்ந்து, காரைக்குடி வட்டம், கழனிவாசல் பகுதியில் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டுச் சிறப்பிக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/car-mks-our-stalin-image-2026-01-30-08-34-00.jpg)