தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டார். அதோடு முக்கிய கோப்புகளைப் பார்வையிட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் 7வது நாளாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை (27.07.2025) சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினர்.
அதே சமயம் முதல்வரின் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த குறிப்பில் முதல்வர் சீரான உடல் நலத்தோடு இருப்பதாகவும், வீட்டிற்குச் சென்ற பின்னரும் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின், நாளை (31.07.2025) தலைமைச் செயலகம் வருகை தர உள்ளார். அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களைக் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைக்க உள்ளார். இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்திற்குச் செல்ல உள்ளார். அங்கு கார் உதிரிப் பாகங்களை ஒன்று இணைத்துத் தயாரிக்கக்கூடிய கார் நிறுவனத்தையும் நேரடியாகத் திறந்து வைக்க உள்ளார்.