மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக வி பி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18.12.2025) கடிதம் எழுதியுள்ளார். அதில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ இரத்து செய்து, அதற்குப் பதிலாக Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G), 2025 சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உருவாக்கச் (MGNREGA) சட்டமானது இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்தை கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமார் 12,000 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. 2021-22 முதல் 2024-25ஆம் ஆண்டுவரை, சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. 2023-24  ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

பாசனத்திற்கு ஜீவ நதிகள் இல்லாத பகுதிகளிலும், விவசாயப் பகுதிகளில் மழை குறைவாக பெய்யும் காலங்களிலும், பட்டியல் இன மக்கள் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்தகைய வேலை முறையே வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளது. மேலும் இச்சட்டமுன்வடிவு மாநிலங்களின் நிதியையும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்”  என்றும் தெரிவித்துள்ளார்.