சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் நாளை (10.01.2026) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியாகிறது. இத்தகைய சூழலில் தான்  தணிக்கை சான்றிதழ் பெறாமல் இப்படம் இழுபறியில் சிக்கியது. இதனால் இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டது. 

Advertisment

இதனையடுத்து தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழை இன்று (09.01.2026) வழங்கியது. மொத்தம் 25 திருத்தங்கள் செய்யப்பட்டன. அதே சமயம் தமிழ் திரையில் உச்சநட்சத்திரமான விஜய்யின் கடைசிப் படம் ஜனநாயகன். இந்த படம் இன்று வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. எச். வினோத் இயக்கித்தில் உருவாகியுள்ள இந்த, படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தின் பாடல்களின் சில வரிகளில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்களையும் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், பல மாவட்டங்களில் படத்திற்கான டிக்கெட் முன் பதிவுகளும் செய்யப்பட்டிருந்தன. 

Advertisment

விஜயின் கடைசிப்படம் மற்றும் பாடல்களில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் என பல்வேறு காரணங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக படக்குழு இப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தராவிடக்கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ஜனநாயகன் படத்திற்கு யு / ஏ சான்று வழங்குமாறு நீதிமன்றம் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டது. 

parasakthi-sk--janananayagan-vijay

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனால் படத்திற்கு எப்போது தணிக்கை சான்று கிடைக்கும், படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் அரசின் சென்சார் போர்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூவ வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

Advertisment