சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘தமிழ் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம்’ விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், மொத்தம் 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், “நாம் வாழ்கிற சமூகம், சாதி, மத, இன, மொழி, பாலின பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் எல்லாம் என்ற சமுத்துவ சமுதாயமாக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய லட்சியம். அந்த லட்சிய பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக அமைந்திருப்பது தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இது உதவித்தொகை இல்லை, உரிமைத் தொகை என்று திட்டத்தை ஆரம்பிக்கும் போதே தெளிவாக சொல்லிவிட்டோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விடியல் பயணம், உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம், இப்படி பல திட்டங்களால் குடும்பத்தில் பணபுழக்கமும் சேமிப்பும் அதிகரித்துள்ளது. இந்த திட்டங்களால் தமிழ்நாட்டின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டு பெண்கள் உயர்த்தி இருக்கிறார்கள். இதை தான் இந்த திட்டத்தின் வெற்றியாக பார்க்கிறேன்.

Advertisment

இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துடைய வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை மாநிலங்கள் கூட இந்த திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நல திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்துபவர்கள் கூட இந்த திட்டத்தை அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்த தொடங்கிட்டார்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, புதுச்சேரி, கர்நாடகா, ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் என உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதை நாம் பெருமைக்காக சொல்கிறேன் என்று யாரும் கருத வேண்டாம். நாம் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தால் சமூகத்தில் இருக்கக்கூடிய தாக்கம் குறித்து பொருளாதார அறிஞர்கள் ஆய்வு செய்து அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில பெண்கள் உயர்ந்து நடைபோட நிச்சயம் உரிமைத் தொகையும் உயரும், பெண்களுடைய உரிமையும் உயரும். எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை எழுதும் போது மகளிர் முன்னேற்றத்தினுடைய புதிய அத்தியாயம் ஸ்டாலினுடைய திராவிட மாடல் ஆட்சியில் தொங்கியது என்று தான் எழுதுவார்கள் என்று நான் உறுதியாக சொல்கிறேன்” என்று பேசினார். 

Advertisment