சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற விழா இன்று (25.09.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “ஒரு வேளை உணவு தருவதாலோ, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாலோ, "என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?" என்று சிலர் நினைக்கலாம். காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்ததில் இருந்து, மாணவர்களுடைய வருகை அதிகரித்திருக்கிறது. புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து, ப்ளஸ் 2 முடித்த மாணவர்களில் 75 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள். குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியில் சேருவது அதிக அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. 

Advertisment

அரசுப் பள்ளியில் படித்த ஆயிரத்து 878 மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் சென்றிருக்கிறார்கள். இன்றைக்கு கல்வியில், தமிழ்நாடு பெற்றிருக்கின்ற எழுச்சி, இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. நம்முடைய திட்டங்களை அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் கல்விக்கு தடை ஏற்படுத்தலாம் என்று ஒன்றியத்தில் நினைக்கிறார்கள். நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து, ஒதுக்க முடியாமல், தடை ஏற்படுத்துகின்ற சிலருக்கு பயத்தை வர வைக்க வேண்டும். 

Advertisment

நிச்சயம் நம்முடைய திட்டங்களாலும், உங்களுடைய சாதனைகளாலும் அது நடைபெறும். என்னுடைய இலக்கு, அனைவருக்கும் கல்வி. அனைவருக்கும் உயர்தரக் கல்வி. கல்வி நிலையங்களுக்குள்ளே எந்த காரணத்தாலும், எவர் ஒருவரும் வராமல் இருக்கக் கூடாது; தடுக்கப்படக் கூடாது. மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். தமிழக அரசு உருவாக்கித் தரக்கூடிய வாய்ப்புக்களை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உயர, உயர பறக்கவேண்டும். அதைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தான் இங்கே பேசிய பலர் கொடுத்திருக்கிறீர்கள். 

இனியும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இளங்கலை முடித்துவிட்டு வேலைக்குச் சென்றாலும், நல்ல வேலையில் டாப் பொசிசனில் சென்று இருந்தாலும், முதுகலையையும் படிக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புக்கும் செல்ல வேண்டும். உலகம் மிகவும் பெரியது. உங்களுடைய வெற்றி அனைத்து திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படியுங்கள். உங்களுடைய படிப்புக்குத் துணையாக உங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த மு.க. ஸ்டாலின் இருக்கிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு. கல்வியிலேயே உயர்ந்த தமிழ்நாடாக மாறவேண்டும்: மாறும்; நிச்சயமாக மாற்றுவோம்” எனப் பேசினார். 

Advertisment