சென்னை வில்லிவாக்கம், சிவசக்தி நகரில், 53 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (11.10.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தினை சார்ந்து வாழ்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 26.06.2021 அன்று கொளத்தூரில் வண்ண மீன் உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து, வண்ண மீன் வர்த்தகத்தினை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவும், சந்தைப்படுத்துதலுக்கான தேவைகள் குறித்தும் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அதனடிப்படையில், வண்ண மீன் வர்த்தகத்தினை பெரிய அளவில் மேம்படுத்திடவும், கொளத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் வர்த்தகத்தினை உலக அளவில் கொண்டு சென்றிடவும். தமிழ்நாட்டில் முதன் முறையாக உலகத் தரத்திலான பிரத்தியேக வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்புடன், சென்னை, வில்லிவாக்கம். சிவசக்தி நகரில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 26.08.2024 அன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே, அது கொளத்தூர்தான். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வண்ணமீன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்; 2021-22-ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தேன்; நேற்று - வில்லிவாக்கம் சிவசக்தி நகரில், இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மையத்தைத் திறந்து வைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்
Follow Us