தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் வாக்குச்சாவடிகளைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற முன்னெடுப்பை திமுக தொடங்கியிருந்தது. அதனையொட்டி அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (10.12.2025) முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு மாதக் காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களைப் பலப்படுத்தும் பணியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எந்த ஷா வந்தாலென்ன?. எத்தனை திட்டம் போட்டாலென்ன?. டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் (Out of Control) தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/en-vaaku-chavadi-mks-2025-12-10-14-50-26.jpg)