Advertisment

“பணிய மாட்டோம்... துணிந்து நிற்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

dmk-mks-mic-speech

தீ பரவட்டும்... வீரவணக்கம்… வெற்றி முழக்கம் என  குறிப்பிட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், அக்கட்சித் தொண்டர்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.  அதில், “தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞர்களும் ஊட்டிய அந்த உணர்வு இன்று வரை நம் உள்ளத்தில் தீயாகக் கனன்று கொண்டிருக்கிறது. அன்று பள்ளி மாணவராக கலைஞர் உயர்த்திப் பிடித்த தமிழ்க்கொடியின் நோக்கம் என்னவோ, அதுதான் இன்று நம் கைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருவண்ணக் கொடியாக உயர்ந்து நிற்கிறது. ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்று டெல்லியை நோக்கி முழக்கமிடச் செய்கிறது.

Advertisment

மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட தீரமிக்க தொண்டர்களின் கோட்டம் இது. இப்போதும் அதிகார மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, இந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தமிழ்மொழியின் மீது இந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.

Advertisment

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதிலிருந்து உதிர்ந்த இலை - தழை - சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.க.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் தி.மு.க.வினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் - மொழி - நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம். 

dmk-mks-mic-speech-1

பாசிசப் படையை எதிர்க்கும் சமூகநீதி - ஜனநாயகப் படையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. அதற்கான முரசு கொட்டும் நிகழ்ச்சியாக, ஜனவரி 20ஆம் நாள் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன. ஜனநாயகப் போர்க்கள வீரர்களான உடன்பிறப்புகளுக்கு ஓய்வில்லை. உங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களில் ஒருவனான எனக்கு ஓய்வுமில்லை - உறக்கமுமில்லை. நம் உடன்பிறப்புகள் தேர்தலுக்கான கட்சி அரசியல் வேலைகளை மட்டும் செய்யவில்லை. ஒவ்வொரு குடிமக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையைப் பாதுகாக்கும் பணியையும் களத்தில் நின்று நிறைவேற்றியிருக்கிறார்கள். கலைஞர் அடிக்கடி சொன்னதுபோல, நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம். 

அந்தக் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சமூகநீதி - மதநல்லிணக்கம் - மாநில உரிமைகளை இலட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம். போர்க்களம் காணும் படை வீரர்கள் தங்களின் நாட்டைக் காத்திட உறுதியேற்பது வழக்கம். ஜனநாயகக் களம் காணும் கழகத்தின் இலட்சிய வீரர்களான உடன்பிறப்புகள், ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன - மொழி எதிரிகளான பா.ஜ.க.வையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும். 

mks-dmk

உங்களில் ஒருவனான நான், தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன். வீரவணக்கத்துடன் தொடங்கும் கழக உடன்பிறப்புகளின் அணிவகுப்பும் களப்பணியும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறும் வரை ஓய்வின்றிச் செல்லட்டும். தொய்வின்றித் தொடரட்டும். மகத்தான வெற்றியுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

dmk admk Assembly Election 2026 b.j.p CBI enforcement directorate INCOME TAX DEPARTMENT mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe