20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மேலும், கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸாடாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் நோ மெட்ரோ (NO METRO) என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படிப் பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படிச் சிதைப்பதைச் சுயமரியாதை மிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் மக்கள் தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, நாக்பூர், புனே மற்றும் கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/19/cm-mks-4-2025-11-19-09-50-51.jpg)