தமிழ்நாடு 2024-2025 நிதியாண்டில் 9.69% பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவிலேயே அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது என்று ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்திருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு கண்டிராத மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் இது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி. இரண்டுமே திமுக ஆட்சி. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் (One Trillion Dollar) பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. ‘இது மிக உயர்ந்த இலக்கு, எப்படிச் சாத்தியமாகும்?’ என்றார்கள். இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)” என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.