Advertisment

“வறுமை இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

mks-kamban-speech

சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழாவின் நிறைவு விழா  நேற்று (08.08.2025) சென்னையில் நடைபெற்றது. இதில் கம்பன் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் தொகுத்த ‘கம்பன் கலைகளஞ்சியம்’ என்ற நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ திராவிட இயக்கம், கம்ப இராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்த இயக்கம். சில கருத்துகளுக்காக விமர்சிக்கப்பட்டாலும், கவிதைக்காக, அதில் இருக்கும் தமிழுக்காக பாராட்டப்பட்டது.

Advertisment

பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான காலத்தில்தான் சென்னை கடற்கரையில் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குச் சிலை வைக்கப்பட்டது. வடபுலத்தைச் சேர்ந்த வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழ் மண்ணின் மணம் மணக்க கம்பர் எழுதியது நமக்கு தெரியும். அயோத்தியின் பெருமையை சொல்லும்போது கூட, காவிரி நாட்டுடன் ஒப்பிட்டவர் கம்பர். இராமனை அவதாரமாக காட்டுவது வால்மீகியின் பார்வை. ஆனால், சக்ரவர்த்தியின் மகனாக தொடங்கி, கோசலை நாட்டு சக்ரவர்த்தியாக முடிப்பது கம்பரின் பார்வை. கதையில் வரும் அரசர்கள் பெயரை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் கம்பர். 

Advertisment

'கம்பன் கண்ட சமரசம்' என்ற புத்தகத்தை எழுதிய நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் கம்பன் கழக விழாக்களைத் தொடர்ந்து நடத்தி, கம்பனின் தமிழில் சமூக ஒற்றுமையைக் கண்டார்."நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேருவது கடல்தான். அதுபோல், வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்" என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 1989ஆம் ஆண்டு இதே கம்பன் கழக விழாவில் உரையாற்றியகலைஞர், "கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம் வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டார். "வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்" என்று கம்பர் சொன்னார். 

அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு. இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்” எனப் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் க. பொன்முடி, வி.ஜி. ராஜேந்திரன் கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் ஞானசுந்தரம்,. பழனியப்பன், பேராசிரியர் சாரதா நம்பிஆரூரன், சுகி சிவம், இலங்கை ஜெயராஜ், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ் அறிஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

poverty Chennai Book release Jagathrakshakan ramayanam Tamilnadu mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe