மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரையில், கமல் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘மறவோம்’ எனும் காந்தியடிகளைப் போற்றும் நிகழ்வு நேற்று (21.02.2026) நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரை ஆற்றினார். அதில், “அண்மையில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு முதலமைச்சரே இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதை பார்த்திருப்பீர்கள். இதை சொல்லவே நமக்கு வெட்கமாக இருக்கிறது. ஆனால், எந்த வெட்கமும் இல்லாமல் இப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். 

Advertisment

சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கூட இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்றைக்கு கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல், சிறுமி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும், இப்படிப்பட்ட சம்பவங்களை அரங்கேற்ற வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். திமுக அரசும், கூட்டணி கட்சிகளும் இருக்கும் வரை, அதை நாங்கள் நடக்க விடவே மாட்டோம். மன்ட்டோ என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறைய பார்த்து, என்ன சொன்னார் தெரியுமா? “முட்டாள்களே, இலட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இலட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதாதீர்கள். 2 இலட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதுங்கள்” என்ற மனம் வெதும்பி சொன்னார். அவர் சொன்னது சரிதான். 

Advertisment

மதம் பிடிக்காமல் மக்களை பக்குவப்படுத்துவதுதான் மதங்களின் வேலை. மதவெறி புகுந்தால், முதலில் இறப்பது மனிதம்தான். இதை நன்றாக உணர்ந்த காரணத்தினால்தால் வெறுப்பை புறந்தள்ளி, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது. மனிதத்தையும், மனிதர்களையும் அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கின்ற பா.ஜ.க.வின் பிடியில் தமிழ்நாடு சிக்கக் கூடாது. இதற்காகதான் சொல்கிறேன், இந்த தேர்தல், தமிழ்நாடு  வெர்சஸ் என்.டி.ஏ. (TAMILNADU vs NDA), அதில் தமிழ்நாடு வெல்லும். பா.ஜ.க. வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை. காந்தியடிகளின் மதநல்லிணக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூகநீதி பார்வையும்தான் தமிழ்நாட்டிற்கு தேவை. இந்தியாவிற்கும் தேவை. 

mks-mnm-kamal-gandhi-book

அந்த அடிப்படையில்தான், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்திருக்கிறது. சிலர் சொல்லுவார்கள், கமல் பேசுவது ‘எங்களுக்கு புரியவில்லை’ என்று, அவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால், புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள். மீடியா, மைக் முன்னால் புலம்பிக் கொண்டிருந்தவர்களை, இப்போது பார்லிமெண்ட் மைக்-லேயும் கமல் புலம்ப வைத்துவிட்டார். அதுமட்டுமல்ல, அவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், சம நீதிக்காகவும், சமூக நீதிக்காகவும் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும் என வாழ்த்துகிறேன். “அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா” என்பது கமலின் பாடல் வரி. அப்படி அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம். காந்தியின் கொள்கைகளை காக்க, வெல்வோம் ஒன்றாக” எனப் பேசினார். 

Advertisment