தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்கு நாங்கள் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை.
இந்தப் பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 2021க்குப் பிறகு, இந்த யூனிவர்சிட்டியை இன்னும் செழுமையாக வளர்த்திருக்கிறோம். இதுதான், நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு. இந்த அரசியல் மாண்பு நடுவில் இல்லாமல் சென்றிருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக எப்போதும் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 2021-க்குப் பிறகு, இந்த யூனிவர்சிட்டியில் நிறைய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்து, நல்கை நிதியை உயர்த்தி ஆராய்ச்சி மையம் நூலகம் கற்றல் மேலாண்மை ஆகிய பல அமைப்புக்களை உருவாக்க ஒரு கோடி ரூபாய் வழங்கினோம்.
கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் நாள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடத்தை திறந்து வைத்தேன். இதற்கு துணையாக இருக்கும் இணை வேந்தர் அமைச்சர் மு.பெ. சாமிநாதனை நான் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.
Follow Us