Advertisment

“வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

dmk-mks-mic-speech

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணை தலைவர் இரா.ஏ. பாபுவின் இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (07-11-2025) நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “இன்றைக்கு நாடு இருக்கும் சூழ்நிலை எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிலும் எஸ்.ஐ.ஆர் (S.I.R.) எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. 

Advertisment

இந்த மாதம் நான்காம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் அது நடைபெறுகிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இதை எதிர்த்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி நாம் தீர்மானம் போட்டு அந்த அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு நாம் சென்றிருக்கிறோம். வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சட்டப் போராட்டம் ஒரு பக்கம் என்று சொன்னாலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது. அது, இன்றைய நிலையில் மிக மிக அவசியமான ஒன்று என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. 

Advertisment

அதற்காக வருகிற 11ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம் என்ற செய்தியைக் கூட  நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, நாம் நம்முடைய உணர்வை வெளிப்படுத்த இருக்கிறோம். ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில்,  பி.எல். ஓ. (B.L.O.)க்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று படிவங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நான்காம் தேதிக்குள் இந்தப் படிவங்களை நிரப்பி அதைச் சமர்ப்பித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரைக்கும், டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் மூன்று முறை அவர்கள் வர இருக்கிறார்கள். 

eci

நாம் வேலைக்குச் சென்று விட்டால், ஏதாவது பணிகளுக்குச் சென்று விட்டால், வீட்டில் இல்லாமல் இருந்தால், நம்முடைய வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால், இந்தப் பணி முடிந்த பிறகு ஆன்லைனில் நாம் தொடர்பு கொண்டு சேர்க்கின்ற முயற்சி இருக்கிறது. அது தேர்தல் நேரத்தில் எவ்வளவு பெரிய நெருக்கடி எல்லாம் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, குறிப்பாக ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறார்கள். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்கு ஒரு தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் தந்திருக்கிறது. ஆனால் அதை மட்டுமே நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது. அதனால்தான் திமுகவைப் பொறுத்த வரைக்கும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மேற்பார்வையில் உதவி மையம் அமைத்திருக்கிறோம். 

திமுக நிர்வாகிகள் உதவிக்காக ஒரு தொலைபேசி எண்ணையும் அறிவித்திருக்கிறோம். திமுக  நிர்வாகிகள் அனைவரும் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், அந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். எஸ்.ஐ. ஆர். (S.I.R.) தொடர்பாக எந்தக் குழப்பம் இருந்தாலும் இதில் நீங்கள் கேட்டுத் தெளிவு பெறலாம். அதுமட்டுமல்ல,  காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி இதற்காகப் பெரிய போராட்டத்தை, இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, கர்நாடகா, ஹரியானா பகுதிகளில் எந்த அளவிற்கு வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது என்று எல்லாம் ஆதாரப்பூர்வமாக எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது. வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும். இந்தப் பெரும் பொறுப்பை கழகத்தின் BLA 2க்கள் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் காவலர்களாகக் திமுகவின் பூத் ஏஜெண்டுகள் செயல்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெற்றிபெற பணியாற்ற வேண்டும்” எனப் பேசினார்.

mk stalin dmk special intensive revision election commission of india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe