தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 4 ஆயிரமாவது குடமுழுக்கு விழா சென்னை, பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் இன்று (28.01.2026) நடைபெற்றது. இதில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள். ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023). 2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024).
3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025). 4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில். இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.
Follow Us