உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா இன்று (03.12.2025) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், “கலைஞரையே நீங்கள் (மாற்றுத்திறனாளிகள்) ஒரு ரோல்மாடலாக - எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். கலைஞர் ஒரு முறை ஒரு விபத்தை எதிர்கொண்டார். அதனால், அவரது ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், அந்த வலியைக்கூட பொறுத்துக்கொண்டு, இறுதிவரை சமூகத்திற்காக உழைத்தார்.
ஏராளமான இலக்கிய படைப்புகள், திமுக தொண்டர்களுக்கு கடிதங்கள், தமிழ்நாட்டு வரலாற்றை திருத்தி எழுதிய அறிக்கைகள், திட்டங்களை அவரால் கொடுக்க முடிந்தது. கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவர் மனதை பாதிக்கவில்லை. கலைஞர் முதுமைக் காலத்தில், சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே, எப்படி பம்பரமாக சுழன்று, சுழன்று உழைத்தார் என்று உங்களுக்குத் தெரியும். இந்த 'வில் பவர்'தான் அரசியலுக்கு அவசியம். மனிதர்களுக்கு அவசியம். அதை நீங்கள் எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்
ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கையை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துதான் இப்படி ஒரு சட்டத்தையே உருவாக்கி இருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் ஆற்றப்போகும் பணிகளைப் பார்த்து, இதை மற்ற மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும். இதுதான், உண்மையான சமத்துவத்தையும் சமூகநீதியையும் நோக்கிய பயணமாக இருக்கும். உங்கள் பணி சிறக்க, வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பேசினார்.
Follow Us