சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02.08.2025) தொடங்கி வைதார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, நேற்று முன்தினம் (31.07.2025) தலைமைச் செயலக அலுவலத்திற்குச் சென்று என்னுடைய வழக்கமான பணிகளை தொடங்கினேன்.
அப்போது என்னுடைய செயலாளர்கள் கூட சொன்னார்கள், ‘வெளி நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கலாமா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை, அதையெல்லாம் தள்ளி வைக்க வேண்டாம், மக்களைச் சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் வரும் - என்னுடைய உடலில் ஏதாவது நோய் இருந்தால் அது சரியாகிவிடும். எனவே, மக்கள் பணியை செய்தால், அதுவே எனக்கு உடல் நலத்தை கொடுத்துவிடும்’ என்று சொல்லிவிட்டு தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசுகின்ற முதல் நிகழ்ச்சி இது. நாட்டு மக்களுடைய நலன் காக்கும் நிகழ்ச்சி. நாட்டு மக்களுடைய நலன்தான், என்னுடைய நலன்” எனப் பேசினார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த. வேலு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.