நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “வேற்றுமையில் ஒற்றுமையும், ஒற்றுமையின் மூலமாக ஒருமைப்பாட்டையும் ஒருமைப்பாட்டின் மூலமாக ஒன்றுபட்ட வளர்ச்சியையும் வழங்க வேண்டும். ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமை. பல மாநிலங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல மதங்களைச் சார்ந்த கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கிய துணைக்கண்டம்தான் இந்தியா. அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, நாம் பீடுநடை போட, அனைவரும் இந்தியராய் ஒருங்கிணைந்து செயல்படக் காரணம், நமது அரசியலமைப்புச் சட்டம். புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்த வரலாற்றுச் சாசனத்தில், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து மக்கள் பணியாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 75 ஆண்டுகளில், நமது அரசியல் களம் கண்ட மாற்றங்களால், இந்த அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பல முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நிலையையும் காண்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட, மக்களுக்கு அருகில் இருந்து செயல்படும் மாநில அரசுகளுக்குப் படிப்படியாகக் கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படும் சூழலில், இதற்கு நேர்மாறாக கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில், மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும், மாநில அரசுகளுக்கான நிதிப் பங்கீட்டிலும், திட்டங்களிலும் ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தாலும், ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைக் களைந்திட ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கினை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு. இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என இந்த விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன். மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல.
இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும். சுயசார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போது தான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு” எனப் பேசினார்.