விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடந்த 17ஆம் தேதி (17.11.2025) கடிதம் எழுதியிருந்தார். அதில், “காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக நிர்ணயிக்குமாறு தமிழ்நாடு அரசால் 19.10.2025 அன்று ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisment

மூன்று குழுக்கள் 25.10.2025 முதல் 28.10.2025 வரை தமிழ்நாட்டில் களப் பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால் தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை. கரீஃப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

Advertisment

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் முன்வைத்த நெல் கொள்முதல் ஈரப்பத தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம். கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

cbe-modi-con

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை?. விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?. கண்ணீர் ஏன் தெரியவில்லை?. கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில்,  இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?. கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?. உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன். 

Advertisment

முன்னதாக கோவையில் நடைபெற்று வரும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (19.11.2025) கோவை வந்தார். அதன் பின்னர், கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை, பி.எம். கிஷான் (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையைப் பிரதமர் மோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.