Advertisment

“மராட்டியத்தின் எழுச்சி இங்குள்ளவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

mkstalinneww

CM Mk stalin says The language rights battle swirling like whirlwind struggle in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவில் இந்தியை மொழி திணிப்பதாகக் கூறி அந்த நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பு வந்ததால், மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்படாது என்று கூறி தனது முடிவுகளிலும் இருந்து மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது.

Advertisment

இந்த சூழ்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த சகோதர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டம் இன்று (05-07-25) மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரே, தன்னுடைய அரசியல் வாரிசாக தனது மகன் உத்தவ் தாக்கரேவை அறிவித்ததால், பால் தாக்கரேவின் சகோதர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து கடந்த 2005ஆம் ஆண்டு நவநிர்மாண் சேனா என்ற கட்சியை ராஜ் தாக்கரே நடத்தி வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் என்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக தாக்கரே சகோதரர்கள் சேர்ந்திருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “இந்தித் திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.

இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. ‘உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன? என்றும், இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன, இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?’ என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?

Advertisment

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது, தர்க்கப்பூர்வமானது. இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது, வெறுப்பின்பாற்பட்டது அல்ல. இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும். தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Raj Thackeray Uddhav Thackeray mk stalin m.k.stalin Maharashtra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe