தமிழ்நாடு அரசு சார்பில் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (11.10.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “கலைஞரின் வழியில், கலைஞர்களை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. கலைஞரின் அரசு கலைகளைப் போற்றும் அரசாக, முத்தமிழைப் போற்றும் அரசாகத்தான் எப்போதும் இருக்கும். அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டுதான், சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இசைஞானி இளையராஜாவுக்கு திராவிட மாடல் அரசு எடுத்த மாபெரும் பாராட்டு விழா.
உலகில் எந்தக் கலைஞருக்கும், எந்த அரசாங்கமும் இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தியதில்லை என்று இசைஞானியே குறிப்பிட்டார். ‘என் மீது ஏன் இவ்வளவு பாசம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று சொன்னார். இசைஞானி மீது நமக்கு இருப்பது கலைப் பாசம், தமிழ்ப் பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான். அந்த விழாவை எடுத்தோம். இன்றும் அதே பாசத்தின் அடிப்படையில்தான். விருதுகள் வழங்குகிறோம். மூன்று தமிழையும் வளர்த்த இயக்கம்தான் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் மேடைத் தமிழை வளப்படுத்தியது. நாடகத் தமிழை வளர்த்து, சமூகத்தையே பண்படுத்தியது. இசைத் தமிழையும் வளர்த்தது. அது தமிழிசையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியுடன் இந்தக் கலைகளும் வளர்ந்தது என்று சொல்லப்படுவதுதான் இந்த வரலாறு!
1944ஆம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கே. நாடக குழுவைத் தொடங்கினார். சீர்திருத்தக் கொள்கை கொண்ட நந்தனார் நாடகத்தை அரங்கேற்றினார். நாடகங்கள் மீது ஆர்வம் கொண்ட பேரறிஞர் அண்ணாதான் 'திராவிட நடிகர் கழகத்தை' காஞ்சிபுரத்தில் உருவாக்கினார். திராவிட மறுமலர்ச்சி நாடக சபை, காஞ்சி திராவிட ஆனந்த நாடக சபை, சீர்திருத்த நாடகச் சங்கம், சுயமரியாதை நாடக சபா, முத்தமிழ் நாடகச் சங்கம், தமிழ் நாடக நிலையம் ஆகிய அமைப்புகள் அடுத்தடுத்து உருவானது” எனப் பேசினார்.