செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பேரறிஞர் அண்ணா சுயமரியாதை திருமண சட்டத்தை இயற்றினார். கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்ட அங்கீகாரம் வழங்கினார். அதன் நீட்சியாகத்தான் சமூக நிதிக்கான இட ஒதுக்கீடுகள். மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என ஏராளமானவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். 

Advertisment

கி. வீரமணி இந்த மாநாட்டிலே நல்ல பல தீர்மானங்களை வடித்துத் தந்திருக்கிறார். நான் கி. வீரமணிக்கு சொல்லிக்கொள்வது இதற்கான, பரப்புரைகளை நீங்கள் சமூக களத்தில் செய்யுங்கள். மக்களின் ஆதரவைப் பெற்ற ஆட்சியைப் பயன்படுத்தி இவற்றைச் சட்டங்களாக, விதிமுறைகளாக, நெறிமுறைகளாக மாற்றும் பணிகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக்கொள்ளும். இந்த தமிழ்ச் சமூகம் சிந்தனை இறுதியாக முன்னோக்கிச் செல்ல திராவிடமாடல் செய்துள்ள முன்னெடுப்புகளில் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்றால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என ஆணைகள் வழங்கி இருக்கிறோம். சாதி வேறுபாடு மட்டுமல்ல பால் பேதத்தையும் உடைத்து பெண்களையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம். 

Advertisment

தந்தை பெரியார் பிறந்த நாளையும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளையும் தமிழ்நாட்டின் முக்கிய நாளாகக் கருதி உறுதிமொழியும் எடுக்கிறோம். ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற காலனி என்ற சொல்லை அகற்றியுள்ளோம். சாதி பெயரால் இருக்கக்கூடிய விடுதிகளை சமூகநீதி விடுதிகளாக மாற்றி இருக்கிறோம் இந்தியப் பிரதமரைச் சந்தித்துச் சாதிப் பெயர்களின் இறுதி எழுத்து 'இர்' என்று முடிவடையக்கூடிய மாற்றம் செய்து மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன் . மனிதர்களுக்கு இடையே இருக்கக்கூடிய வேற்றுமையையும் பகையையும் விரட்ட சமூக நீதி சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, பொது வுடமை, கல்வி உரிமை, அதிகார உரிமை ஆகியவை வேண்டும். அப்படிப்பட்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்கத்தான் திராவிட மாடல் அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” எனப் பேசினார்.

மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் சுயமரியாதை. அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம். கி. வீரமணி அவர்களே... உங்கள் பணிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும். நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான திராவிட மாடல் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment