பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தப் பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி (04.11.2025) முதல் வரும் டிசம்பர் மாதம் 04ஆம் தேதி வரை என ஒரு மாதத்திற்கு வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து டிசம்பர் 09ஆம் தேதி (09.12.2025) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 09ஆம் தேதி (09.12.2025) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி (08.01.2026) வரை பெயர்களைச் சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை மற்றும் சரிபார்த்தல் டிசம்பர் 09ஆம் தேதி (09.12.2025) முதல் ஜனவரி 31ஆம் தேதி (31.01.2026) வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 07ஆம் தேதி (07.02.2026) வெளியிடப்பட உள்ளது.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/11/dmk-mks-sir-2025-11-11-13-22-47.jpg)
இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.ஐ.ஆரைத்(SIR) தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் எஸ்.ஐ.ஆர். எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம். மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட எஸ்.ஐ.ஆ பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட வார்ரூம் (War Room), உதவி தொடர்பு எண்கள் ( Help line) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் எஸ்.ஐ.ஆர். எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர். தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/sir-dmk-pro-mks-2025-11-11-13-21-43.jpg)