மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று (25.01.2026)  நடைபெற்றது. இதில் திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்துகொண்டு வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற பெயரைக் கேட்டாலே, ஓடி ஒளியும் கோழைகள் தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வாறு காப்பாற்றுவார்கள்? பா.ஜ.க.வின் ஏவல் படையாகச் செயல்படும் புலனாய்வு அமைப்புகளை வைத்துக் கொண்டு, தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கலாம், பணிய வைக்கலாம் என்று நினைத்தால், மக்கள் ஆதரவுடன் அதை எதிர்கொள்ளும் உறுதி தி.மு.க.விற்கு இருக்கிறது.

Advertisment

நாங்கள் பணிய மாட்டோம். துணிந்து ஒரு கை பார்ப்போம். மண், மொழி, மானம் காத்திடும் எங்கள் ஈராயிரம் ஆண்டுப் போரை தொடர்ந்திடுவோம். 2026 தேர்தல் களமும் ஆரிய, திராவிடப் போரின் மற்றொரு களம்தான். தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலி பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதிசெய்யும் களம்தான், இந்தக் களம். பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணிலிருந்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, திமுக தொண்டர்களே, கூட்டணித் தோழர்களே, தோழமை இயக்கத்தவர்களே, உங்கள் பரப்புரையை இன்றே தொடங்குங்கள். 

Advertisment

ஐந்து ஆண்டுகளாக நாம் மக்களுக்குச் செய்துகொண்டு வரும் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், திராவிட மாடல் அரசு தொடர வேண்டும்! உத்தரப் பிரதேசம் போன்று, மணிப்பூர் போன்று, தமிழ்நாடு வன்முறைக் காடு ஆகாமல் தடுக்கப்பட வேண்டும். திராவிட மாடல் அரசு தொடர, திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க, மொழிப்போர் ஈகியர்களின் தியாகத்தின் மீது உறுதி எடுப்போம். பேரறிஞரைத் தந்த அண்ணாவின் காஞ்சியில் இருந்து நான் உறுதியாகச் சொல்கிறேன். டெல்லியின் ஆதிக்கத்துக்கு, தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது. மீண்டும் சொல்கிறேன், டெல்லியின் ஆதிக்கத்துக்கு, தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது. தீ பரவட்டும்! வெல்வோம் ஒன்றாக” எனப் பேசினார்.