சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.10.2025) கரூர் சம்பவம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அதில், “தமிழ்நாடு அரசு இந்தச் சம்பவத்தை சட்டப்படி விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண விநியோகம் அனைத்தும் சரியான முறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்காக ஒப்படைக்கப்பட இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான் எனது ஐம்பது ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன், நடத்தியும் இருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தும்போது, அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான், நமது தமிழ்நாடு மக்கள்தான். சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவியபோது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் கட்சித் தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்பமாட்டார்கள் என்றுதான் நான் குறிப்பிட்டேன். இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதுமட்டுமின்றி, அரசின் உயர் அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையை வீடியோக்களுடன் ஆதாரத்தோடு தெளிவுபடுத்தினார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது திமுக அரசு. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்தது திமுக அரசு. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்பதை நான் இங்கே உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் இதுபோன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும்விட மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்” எனப் பேசினார்.