திமுகவின் 75வது ஆண்டு நிறைவைடைந்ததையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “திமுக 75 - அறிவுத்திருவிழா” என்ற நிகழ்வை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (08-11-2025) தொடங்கி வைத்தார்.  அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அதில், “முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967இல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த திமுக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். 

Advertisment

ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று அறிவித்தோம் என்று திமுக ஆட்சிக்கு வரவில்லை. திமுகவின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள். எத்தனை பத்திரிகைகள். எத்தனை புத்தகங்கள். எத்தனை கூட்டங்கள். எத்தனை கொள்கை வகுப்பெடுக்கும் நாடகங்கள், திரைப்படங்கள். எத்தனை போராட்டங்கள். எத்தனை சிறைவாசங்கள். எத்தனை தியாகங்கள். எத்தனை துரோகங்கள். தி.மு.க. உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல.

Advertisment

சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல், திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக் கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இவ்வாறு நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை!

dmk-75-arivu-thiruvizha-book-release

இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வைப் போன்று வெற்றி பெற, தி.மு.க.வைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரு தி.மு.க.தான். இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது” எனப் பேசினார். 

Advertisment