மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று (25.01.2026) நடைபெற்றது. இதில் திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “பிரதமர் மோடி அவர்களே... கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நினைவிருக்கிறதா? உங்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு நீங்கள் அத்தனை முறை வந்து பிரசாரம் செய்தீர்களே? அதற்குப் பரிசாக, முழுமையான தோல்வியைத் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குப் பரிசாகக் கொடுத்தது மறந்துவிட்டதா?. 

Advertisment

உங்கள் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தாரே! அவர் என்ன வெறும் பழனிசாமி என்று நினைத்துவிட்டீர்களா? அவர் சாதா பழனிசாமி இல்லை! ‘தி கிரேட்’ பத்துத் தோல்வி பழனிசாமி. 2019இல் இருந்து அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைத் தவிர வேறு எதையும் காணாத மாவீரர்! இப்படி ஒரு பெயிலியர் கும்பல் சேர்ந்து கொள்கையால் இணைந்திருக்கும் தி.மு.க. கூட்டணியை வீழ்த்தப் போகிறார்களாம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு வரப்போகிறதாம், வளர்க்கப்போகிறதாம், பாடுபடப்போகிறதாம். இதை எவ்வாறு பிரதமரால் சிரிக்காமல் சொல்ல முடிகிறது?. நன்றாக கவனியுங்கள்... அ.தி.மு.க. அரசு இல்லை. அவர்களே இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்றுதான் சொல்கிறார்கள். நீங்கள் வந்து வளர்க்கும் நிலையிலா நாங்கள் இருக்கிறோம்?. தமிழ்நாடு ஏற்கனவே வளர்ந்துதான் இருக்கிறது. நாளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதை நீங்கள் கெடுக்காமல் இருந்தாலே போதும்!

Advertisment

தமிழ்நாடு, பொருளாதாரத்தில், தொழில் முதலீட்டில், கல்வியில், வேலைவாய்ப்பில், மருத்துவத்தில், சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒன்றிய அரசாலேயே மறைக்கவோ, மறுக்கவோ முடியாத அளவிற்கு வளர்ந்திருக்கிறது. உங்கள் புள்ளிவிவரங்களே அதைத்தானே சொல்கிறது. பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டை அழிக்கும் உங்கள் எண்ணம் பலிக்காது. பக்தர்கள் மனம் மகிழும் ஆட்சியை நடத்துகிறோம். காஞ்சிபுரம், கோயில்கள் நிறைந்த நகரம். இங்குக் குழப்பம் ஏற்படுத்த நினைத்தால், அந்த எண்ணம் நிறைவேறாது. நாடும், நாட்டு மக்களும் அமைதியாக வாழும் இந்த நிலை. சிலருக்கு பிடிக்கவில்லை. நாட்டின் பிரதமரே இந்த நோக்கம் கொண்டவராக இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

nda-meeting-modi-1

தமிழ்நாட்டில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாகிவிட்டது என்று பொத்தாம் பொதுவாகப் பிரதமர் பதவியில் இருந்து அவர் பேசிவிட்டுச் செல்வது சரியல்ல. நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட 11 ஆயிரத்தி 311 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் பிடிபட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. அதில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில துறைமுகங்களில்தான் சிக்கியிருக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள்? தி.மு.க.வா? இல்லையே. உங்கள் ஆட்சிதானே நடக்கிறது?. டபுள் எஞ்சின் என்று சொல்லும், டப்பா எஞ்சின்-தானே அங்கு ஓடுகிறது?. இந்தியாவுக்குள் போதைப் பொருள் நுழைவதைத் தடுக்க வேண்டியது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான். இந்த ஸ்டாலின் இல்லை. மகாராஷ்டிரா சென்று பேச வேண்டியதை, மதுராந்தகத்திற்கு வந்து பேசிவிட்டுச் செல்வது நியாயமா?” எனப் பேசினார்.

Advertisment