‘சோசலிசக் கியூபாவைக் காப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம், ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டைக் கொண்டாடுவோம்’ என்ற முப்பெரும் விழா சென்னையில் நேற்று (12.08.2025) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உலகம் முழுவதும் நடைபெறும் ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்க வேண்டிய நெருக்கடி இப்போது இருக்கிறது. ஏகாதிபத்திய சதிகள் என்பது, ஏதோ போர் தொடுப்பதால் மட்டும் ஏற்படுவது இல்லை. இந்தியாவுக்கு 50 விழுக்காடு வரியை அமெரிக்கா பிறப்பித்துள்ளதும் இதேபோன்ற சதிதான். இதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இதுகுறித்து வெளிப்படையான பதிலை ஒன்றிய பாஜக அரசும், பிரதமர் மோடியும் பதிவு செய்தாக வேண்டும்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஐந்து சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து, ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், எதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ஃப் அவர்கள் தன்னிச்சையாக வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டும்?. இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ஃப் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால், பிரதமர் மோடி பதிலே சொல்லவில்லை. இது அவருடைய பலவீனத்தின் அடையாளம். ஆனால், கியூபாவின் அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, பலத்தின் அடையாளமாக இருந்தார். அந்த நாட்டின் பாதுகாப்பு அரணாக இருந்தார். அந்த நாட்டு மக்களுக்கு காவல் அரணாக இருந்தார். அதனால், உலகத் தலைவர்களின் அடையாளமாக இருக்கிறார்” எனப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கியூபா குடியரசின் இந்தியத் தூதர் யுவான் கார்லோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில பொதுச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், மூத்த பத்திரிக்கையாளர் என். ராம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், கியூபா ஒருமைப்பாட்டுக் குழு மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், மாநிலத் தலைவர் ரோகிணி, கியூபா ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.