திமுகவின் 75வது ஆண்டு நிறைவைடைந்ததையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “திமுக 75 - அறிவுத்திருவிழா” என்ற நிகழ்வை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று (08-11-2025) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இது கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந்தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால்தான், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், எத்தனை பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை (திமுகவை) வீழ்த்த முடியவில்லை என்று உணர்த்துகிறது.
கொள்கைரீதியாகத் தி.மு.க.வை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்! அதுதான், எஸ்.ஐ.ஆர். ( S.I.R). ஏன் இந்த , எஸ்.ஐ.ஆர்.-ஐ அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்? இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், தேர்தல் ஆணையம் , எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராகச் சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து போராடப் போகிறோம். போராடுவோம். அது வேறு. இளைஞரணியினரிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, களத்தில் வேலை செய்யும் நீங்கள், எந்தவொரு போலி வாக்காளரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! அதற்காகக் களப்பணியாற்ற வேண்டும். நம் (திமுக) இயக்க வரலாறு முழுவதுமே போராட்ட வரலாறுதான். நம்முடைய போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கொள்கைத் திருவிழாதான், இந்த அறிவுத் திருவிழா. முற்போக்கு விழாவாக, கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/09/dmk-75-arivu-thiruvizha-book-release-1-2025-11-09-10-13-46.jpg)