காசாவில் நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் இன்று (08.10.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற து. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், “கடந்த ஓராண்டாகவே காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் 17 ஆயிரம் குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐ.நா. ஊழியர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு எதிராகப் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய கொடுமைகளுக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஜூன் மாதத்தில் பட்டினியால் வாடக்கூடிய பாலஸ்தீனர்கள் உணவுப் பொருள் ஏற்றி வரக்கூடிய லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்போது 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
உணவுக்காகக் காத்திருந்தவர்களை உயிரையே பறித்திருக்கக்கூடிய இந்த கொடூரத்தைப் பார்த்து எல்லோருடைய இதயமும் நொறுங்கிப் போயிருக்கிறது. மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படுகிற கொடுமைகளை இந்த அநீதியைக் கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனது ஒப்புமா ?. சில நாட்களுக்கு முன்னாள் இன்னொரு செய்தியும் வந்தது. காசாவில் மரணத்தின் விளிம்பில் தவித்துக் கொண்டு இருக்கக்கூடிய பாலஸ்தீன் மக்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான பால் பவுடர்கள் அதை எடுத்துக் கொண்டு சென்ற 47 நாடுகளைச் சார்ந்த தன்னார்வலர்களைத் தடுத்துக் கைது செய்திருக்கிறது இஸ்ரேல். பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இது போன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா ?. காசாவில் நடந்து கொண்டிருக்கக்கூடிய இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது. எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும். மனிதம் காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.