மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் திமுக உறுப்பினருமான வில்சன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல். 2021 ஜூலை 29 அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள். சமத்துவ நாயகர், சமூகநீதிக் காவலர் முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டிய வழியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம். இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டமருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை.
14 வருடங்களாக மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்ததன் மூலம், ஆண்டுதோறும் இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் 4 ஆயிரத்து 22 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளில் 1000 இடங்களும் கிடைப்பெற்ற நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தமாக 20 ஆயிரத்து 88 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர். முதல்வரின் பணி மகத்தானது மட்டுமல்ல… வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. சாதனைப் பயணம் தொடரட்டும். சமூகநீதி தீர்ப்பு சிறக்கட்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த பதிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “20 ஆயிரத்து 88 இடங்கள் பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு.சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம். சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.