திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (09.11.2025) நடைபெற்றது. காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், “தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது. 

Advertisment

அதே சமயம்  எந்த ஒரு தகுதி இல்லாத வாக்காளரையும் பட்டியலில் இணைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். திமுக பாக முகவர்கள் (பி.எல்.ஏ. 2) பல்வேறு இடங்களில் தஙளது பணிகளைத் தொடங்கவில்லை என்ற தகவல்களும் கிடைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் எஸ்.ஐ.ஆர். குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. அதே போன்று பி.ஓ.க்கள் எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கே புரியவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும். மீண்டும் திமுக வெற்றி பெறக்கூட்டாது என பாஜக திட்டமிட்டுச் செயல்படுகிறது. யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையது” எனப் பேசினார். 

Advertisment

மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள எஸ்.ஐ.ஆர் ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை. நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும், இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது! அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment