தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிட வேண்டும். முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிட வேண்டும். தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய இரயில்வே திட்டங்களை அனுமதித்திட வேண்டும். ரயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (08.02.2026) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு, குறிப்பாக, நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை முறையாக விடுவித்தல் மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குதல் போன்றவற்றில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய நேரத்தில் தீர்வு காணவேண்டும். ஊடகங்களில் இதுதொடர்பாக பரவி வரும் உண்மைக்கு புறம்பான சில செய்திகளுக்காகவும் இக்கடிதத்தினை தான் எழுதுகிறேன்.
அரசின் தமிழ்நாட்டில் ஒன்றிய பல்வேறு இரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2500.61.06 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 931.52.96 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு இரயில்வே துறை நிதியை ஒதுக்கவில்லை. இரயில்வே துறையிடமிருந்து சமீபத்தில் திருத்தப்பட்ட நிலத்திட்ட அட்டவணை (T.PS) பெறப்பட்ட இரண்டு திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிருவாக அனுமதி செயல்பாட்டில் உள்ளது. அது விரைவில் வழங்கப்படும். 19 முக்கிய இரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1273.05.15 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களில், 1198.02.34 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்கள். அதாவது 94 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு அவை இரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/08/train-2026-02-08-10-47-22.jpg)
இருப்பினும் ஐந்து திட்டங்களுக்கு இரயில்வே துறையால் நிலத் திட்ட அட்டவணை (L.PS) இன்னும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களான திண்டிவனம் - நகரி அகல இரயில் பாதை, மதுரை - தூத்துக்குடி அகல இரயில் பாதை, மணியாச்சி - நாகர்கோவில் அகல இரயில் பாதை கன்னியாகுமரி - நாகர்கோவில் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல், நாகர்கோவில் - இரணியல் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல், தூத்துக்குடி - மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை கட்டம்-1). சின்னசேலம் - கள்ளக்குறிச்சி புதிய அகல இரயில் பாதை மயிலாடுதுறை - திருவாரூர் அகல இரயில் பாதை, பட்டுக்கோட்டை நான்கு முனை சந்திப்பு, புதிய அகல இரயில் பாதை (சேலம் - கரூர் வழித்தடம் உருவாக்குதல்). மன்னார்குடி-நீடாமங்கலம் அகல இரயில் பாதை சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை மூன்றாவது, நாண்காவது வழித்தடம் மற்றும் விழுப்புரம் - திண்டுக்கல் அகல இரயில் பாதை ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன
மேலும் மீதமுள்ள திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நில எடுப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவது மிக முக்கியம். துரதிர்ஷ்டவசமாக ரயில்வே அமைச்சகத்தால் நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்கள் தனிப்பட்ட திட்டங்களுக்குப் பெரும்பாலும் நிதியினை முழுமையாக வழங்காமல் பிரித்து வழங்குவது என்பது, தமிழ்நாட்டில் இரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தாமதங்களுக்கு முன்னேற்றத்தினைத் வழிவகுத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நீடித்த நிச்சயமற்றதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையேயான அகல இரயில் பாதை இரட்டிப்பு திட்டத்திற்கான 16.86.51 ஹெக்டேர் நில எடுப்புப் பணி முடிக்கப்படாமல் இருப்பது இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம்.
இத்திட்டத்திற்கான நில எடுப்பிற்கு உரிய இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான 289.78 ரூபாய் கோடி நிதியினை ரயில்வே துறை இன்னும் ஒதுக்கவில்லை. இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு பெரிய திட்டம். இது ஒன்றிய அரசின் திட்டக் கண்காணிப்புக் குழுவின் (PMG) வலைதளத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை பகுதி பகுதியாக வழங்குவதற்குப் பதிலாக மொத்தமாக சரியான நேரத்தில் ஒதுக்குவதன் மூலம் இந்த முக்கியமான திட்டங்களைத் தடையின்றி விரைவாக முடிக்க முடியும். தமிழ்நாடு அரசு ரயில்வே திட்டங்களுக்கு உயரிய முன்னுரிமை அளித்து, வலுவானதொரு கண்காணிப்பு வழிமுறையினை ஏற்படுத்தியுள்ளது. திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்தவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் போக்குவரத்துத் துறை செயலாளரும் இரயில்வே அதிகாரிகளுடன் தொடர்ந்து மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/08/mks-modi-2026-02-08-10-47-42.jpg)
இந்தத் தருணத்தில், சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய இரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் விளங்கும் தமிழ்நாடு தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குத் தொடர்ந்து கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. மேம்பட்ட இரயில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மூலம் தாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் மகத்தான ஆற்றலை தமிழ்நாடு கொண்டுள்ளது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு, நில எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக, அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.
ரயில்வே துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களான தூத்துக்குடி - மதுரை (அருப்புக்கோட்டை வழியாக புதிய அகலப்பாதை மற்றும் திண்டிவனம் - திருவண்ணாமலை அகலப்பாதை (ஏற்கெனவே 934.52.96 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த நிருவாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும். இதற்குத் தேவையான நிதியினை வழங்கிடவும், தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப கூடுதலாக புதிய இரயில் திட்டங்களை அனுமதிப்பது குறித்து பரிசீலித்திடவும், பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/08/cm-mks-1-2026-02-08-10-48-05.jpg)
பிரதமர் மோடியின் தலையீடு, கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதோடு, ஒன்றிய மற்றும் மாநில அரசின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க உதவிடும். இந்நிலையில், இரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழ்நாடு அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடியிடமிருந்து விரைவில் சாதகமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us