ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (26.11.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ 2019-ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா -அதை முன்னின்று நடத்தியவர் அதியமான். அதில் பங்கேற்று, சிறப்பித்து பெருமை சேர்த்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஈஸ்வரன்.

Advertisment

மாவீரன் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்போம் என்று அந்த நிகழ்ச்சியில் நான் உறுதியளித்தேன். இன்றைக்கு அதை உங்கள் முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். இன்று திரையில் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றை சிறு குறிப்பாக எடுத்து வெளியிட்ட நேரத்தில் அதை சுட்டிக்காட்டினார்கள். பவானிப்போர் ஓடாநிலைப் போர் அரச்சலூர் போர் என்று அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் மாவீரன் பொல்லான். பொல்லானின் வீரத்தை கண்டு. சினம் கொண்ட ஆங்கிலேயப் படை தளபதி கர்னல் ஹாரிஸ் தலைமையிலான படையால், மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார். 

Advertisment

அவருடைய தியாகத்தைப் போற்ற அவருடைய வீரத்தை காலத்துக்கும் எடுத்துச் சொல்ல, இப்படியொரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக இருந்த வந்த கோரிக்கை, இப்போது  திராவிட மாடல் அரசின் மூலமாக அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த பெருமையான தருணத்தில், ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏன் உங்களின் பலருக்குக் கூட அது நினைவிருக்கும் என்று கருதுகிறேன். கடந்த ஜூன் மாதம் ஆங்கில நாளேட்டில், ஒரு செய்தி வந்திருந்தது.அதை படித்ததுமே, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தச் செய்தி என்னவென்றால், அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம். 

pollan-1

அந்த மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதைப் பற்றி ஆங்கில பத்திரிகையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைப் பெற்று, ஆதாரத்துடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அந்தச் செய்தியில், 2009-ல் 193 அருந்ததியினர் மாணவர்கள் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நிலைமாறி இந்த ஆண்டு 3 ஆயிரத்து 944 மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள் என்றும், 2023-24-ஆம் ஆண்டில், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பெருமை என்னவென்றால், உங்களில் பலருக்கும் தெரியும். இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தை கலைஞர் நிறைவேற்ற முடிவு செய்தார் 

Advertisment

அதன்படி சட்ட மசோதவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் ஆனால், திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் எழுந்து நடமாட முடியாத நிலை அன்றைக்கு ஏற்பட்டது. அன்றைக்கு காலையில் ‘உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வா’ என்று எனக்கு தொலைபேசியிலிருந்து அழைப்பு வருகிறது. வந்தவுடன் என்னை அழைத்து சொன்னார்.

pollan-2

நான் ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இன்றைக்கு நிறைவேற்றவேண்டும், அறிமுகப்படுத்த வேண்டும் என்னை மருத்துவர்கள் செல்வதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அதனால், நீ சென்று என்னுடைய சார்பில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்து என்று எனக்கு உத்தரவிட்டார்கள். அந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வாய்ப்பு இந்த அடியேன் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்று இன்றைக்கு நான் பெருமைப்படுகிறேன்” எனப் பேசினார்.