Advertisment

“பதவிகளைத் துச்சமாக நினைத்து சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்” - முதல்வர் புகழாரம்!

vp-sing-mks

கோப்புப்படம்

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீன்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங்குக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் வி.பி. சிங். இவர் செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர். பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். 

Advertisment

அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட 2வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர் வி.பி. சிங் ஆவார். 

Advertisment

மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து வி.பி. சிங் சிலையை கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி (27.11.2023) அவரது நினைவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

vp-sing-statue

இந்நிலையில் வி.பி.சிங்கின் நினைவு தினம் இன்று (27.11.2024) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் புகழ் ஓங்குக. தமிழ்நாடும், கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர். என் மீது அன்பு காட்டியவர். பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர். தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங்கின் முழுவுருவச் சிலை. 

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு (EWS), நீட் (NEET) என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே  மிஸ் (Miss) செய்கிறோம். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங்  நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். 

former prime minister mk stalin reservation social justice vp singh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe