கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் இன்று (17.09.2025) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

Advertisment

இந்த விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திராவிட மாடல் அரசைப் பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது. வாய்க்கு வந்த அவதூறுகளை எல்லாம் அள்ளி வீசுகிறார்கள். அவர்களுடைய கண்ணீர் ஆட்டுக்காக ஓநாய் வடிக்கிற கண்ணீர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதையும் செய்யாமல் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற தெம்போ திராணியோ இல்லாமல் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தார். பாஜக தன்னோடு இருக்கிறது என்று இப்போதும் வாய்த் துடுக்கோடு பேசிக்கொண்டு இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையிலே பேசிட்டு இருக்கிறார். 

கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் பழனிசாமியினுடைய தரத்தை மக்கள் தெளிவாக எடை போட்டு பார்ப்பாங்கன்னு நானும் விட்டுட்டேன். ரெய்டில் இருந்து தன்னை காப்பாற்றிக்க அதிமுகவை அடகு வைத்துவிட்டார். “திராவிடம் என்றால் என்ன?” என்று கேட்டபோது, அதெல்லாம் தனக்குத் தெரியாது என்று சொன்ன அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதுதான் வெட்கக்கேடு அ.தி.மு.க. தொடங்கியபோது தங்களின் கொள்கை, ‘அண்ணாயிஸம்’ என்று சொன்னார்கள். அதை இப்போது பழனிசாமி ‘அடிமையிஸம்’ என்று மாற்றி, அமித்ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். 

“முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு?” என்று கேட்பார்கள். அதைப்போல நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து “காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?” என்று கேட்கிறார்கள். இதில் அவரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா?. ஆனால், மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பளித்துப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் – கடமையும் நமக்கு இருக்கிறது! அதுவும், வெறும் சொல்லால் அல்ல; செயல்களாலும் திட்டங்களாலும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்” எனப் பேசினார்.