செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இந்தப் பரந்த மக்கள் கடல் தமிழ்நாடு முழுவதும், நாடு முழுவதும் ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்குத் தயாராக உள்ளது என்பதே செய்தி.
திமுகவின் தவறான நிர்வாகத்திலிருந்து தமிழகம் இப்போது விடுதலையைத் தேடுகிறது. தமிழகம் இப்போது பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விரும்புகிறது. திமுக அரசிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டை வளர்ந்த, பாதுகாப்பான மற்றும் ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசு வெளியேறுவதற்கான கவுண்ட்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. நீங்கள் (பொதுமக்கள்) திமுகவுக்கு இரண்டு முறை முழு பெரும்பான்மையை வழங்கினீர்கள். ஆனால் அவர்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டார்கள்.
திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அதற்காக எந்த வேலையும் செய்யவில்லை. மக்கள் இப்போது திமுக அரசாங்கத்தை சி.எம்.சி. அரசாங்கம் என்று அழைக்கிறார்கள். சி.எம்.சி. அரசாங்கம் என்பது 'ஊழல், மாஃபியா மற்றும் குற்றத்தை' ஊக்குவிக்கும் அரசாங்கம் என்பது பொருளாகும். தமிழக மக்கள் இப்போது திமுக மற்றும் சி.எம்.சி. (C: Corruption, M: Mafia, C: Crime) இரண்டையும் வேரோடு பிடுங்க முடிவு செய்துவிட்டனர். இங்கே, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஆட்சிக்கு வருவது உறுதி” எனப் பேசினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/23/nda-meeting-modi-2026-01-23-18-38-18.jpg)
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஓடாது. மாண்புமிகு பிரதமர் அவர்களே…ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…நீங்கள் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரை விட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் ‘டப்பா எஞ்சின்’ நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டை ஏமாற்றுகிறது (#NDABetraysTN) என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது”எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us