நபிகள் நாயகத்தின் 1500வது பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.09.2025) நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது விழாக் குழுவினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கி, சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், “இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் வருகிறது என்றால் உங்களுக்கு துணை நிற்கும் முதல் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உண்மையான தோழமை உணர்வோடு போராடியது தி.மு.க.தான். 

Advertisment

அந்தச் சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பியதும், அந்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதும் யார் என்று, உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல், முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது அ.தி.மு.க. எப்படி இரட்டை வேடம் போட்டது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால்தான்,  அன்வர் ராஜா போன்றவர்கள், துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சிகளை புறக்கணித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கிறார்கள். அதேபோல், வக்பு சட்டத் திருத்தத்திலும் அ.தி.மு.க. நடத்திய கபட நாடகத்தை எல்லோரும் பார்த்தார்கள். ஆனால், தி.மு.க. உள்ளிட்ட இயக்கங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தால்தான் இன்றைக்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த முக்கியத் திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறோம்.

பா.ஜ.க. செய்து வரும் மலிவான சர்வாதிகார எதேச்சாதிகார அரசியலுக்கு துணை போகக்கூடிய துரோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புறக்கணிக்க வேண்டும். நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த விழா மேடையில் நின்று நான் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு உறுதியை தருகிறேன். இசுலாமிய மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பெற்றுத்தரும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் உங்கள் கூடவே உங்களில் ஒருவராக இருக்கும்” எனப் பேசினார்.