Advertisment

“இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை” - முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்!

tn-education-policy-release-mks-speech

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்விக்கான “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025”- ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்இன்று (08.08.2025) வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்த கல்விக் கொள்கை மூலமாக படித்து, மனப்பாடம் செய்வதைவிட சிந்தித்து, கேள்வி கேட்கின்ற மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை வழங்க இருக்கிறோம். தொழில்நுட்ப மனம் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். 

Advertisment

கல்வியோடு உடற்பயிற்சியும் இணைக்கப்படும். தாய்மொழி தமிழ் நம்முடைய அடையாளமாக பெருமிதமாக இருக்கும். முக்கியமாக தமிழும் ஆங்கிலமும் என்கிற இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கையாக இருக்கும். மீண்டும் சொல்கிறேன். இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை. ஒவ்வொரு ஒன்றியத்திலும், புதிய மாதிரி வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும். உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் 'ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை' என்ற நிலையை உருவாக்கும். மதிப்பெண்களாக இல்லாமல் மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக, தேர்வு முறை அமையும்! பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 

Advertisment

நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டுவதாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். இப்படி, கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறோம். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி. இதுதான். திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை. பள்ளிகள் எல்லோருக்குமானது. அங்கு யாருக்கும் தடை இல்லை. தடுக்கப்படவும் விடமாட்டோம். யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது. கல்வி பாகுபாட்டை நீக்குவோம். நீங்கள் விரும்புகின்ற கல்வியைப் பெறுவதற்கான வாசலை, நம்முடைய கல்விக் கொள்கை திறந்து வைக்கும். கல்விச் சமத்துவத்தை உருவாக்குவோம். அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம். முக்கியமாக அது பகுத்தறிவுக் கல்வியாக இருக்கும். 

அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குச் சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்” எனப் பேசினார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர்  நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் எம். ஆர்த்தி,  தாய்பே வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தின் தலைமை இயக்குநர் ஸ்டீபன் எஸ்.சி. ஷு, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா. சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொணடனர்.

school education department education policy state education policy mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe