தி.மு.க. நிர்வாகிகளுக்கான ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரிலான பயிற்சிக்கூட்டம் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று நடைபெறது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “ 2019ஆம் ஆண்டு முதல், எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்று வருகிறோம். நம்முடைய வெற்றிகள், நம்முடைய எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம். அன்றைக்கு தலைப்புச் செய்தி என்ன என்றால், “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!”.இதுதான் தலைப்புச் செய்தி!.
இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை!. உங்கள் உழைப்பின் மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன். திராவிட மாடல் அரசின் திட்டங்களும், சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும், தொழில்துறையில் மிகப்பெரிய பாய்ச்சலையும், கல்வித் துறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கும் திட்டங்களும் சாதனைகளும்தான் திராவிட மாடலின் அடையாளம். இந்தியாவில் எந்த மாநில அரசும் நம்முடைய அளவிற்கு சாதனைகள் செய்திருக்க மாட்டார்கள். மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம். திமுக அரசு செய்த சாதனைகளால்தான் நம்மால் தைரியமாக அனைவர் வீட்டுற்கும் சென்று, ஆதரவு கேட்க முடிகிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை, நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லி, ‘தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்’ என்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, இந்த மாபெரும் முன்னெடுப்பை வெற்றியடைய வைத்த, கழகத்தின் ரத்த நாளங்களான உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும், இந்த மேடையில் இருந்து, என்னுடைய பாராட்டுகளை, இந்த சல்யூட் மூலமாக சொல்லிக் கொள்கிறேன். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வால்தான், பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல், முதுகெலும்போடு எதிர்த்து நிற்கிறோம். எதிர்த்து நிற்பது மட்டுமல்ல; விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது மாதிரியான பல போராட்டங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/28/mks-saltute-2025-10-28-15-10-36.jpg)
இப்போது கூட, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, பல்வேறு மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைத்தோம். அகில இந்திய மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக போராடி வாதாடி வெற்றி பெற்றோம். இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.வுக்கு நம் மீது கோபம் வருகிறது. அதனால்தான், பல்வேறு சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க, இன எதிரிகளும், தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். இவர்களை வீழ்த்தி, நம்முடைய மண், மொழி, மானத்தை காக்க வேண்டும். அதற்காகத்தான் தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
தமிழ்நாடு இப்போது சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்தியின் பேரால் - சமஸ்கிருதத்தின் பேரால், ஜி.எஸ்.டி.யின் பேரால் - புதிய கல்விக் கொள்கையால் - நீட் தேர்வால், சட்டங்களால், உத்தரவுகளால், ஆளுநரால் என தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். இந்தத் தாக்குதலை முறியடிக்கும் வல்லமை நமக்குத்தான் இருக்கிறது. பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவர்களுக்கும் அது நன்றாகத் தெரியும். ஆனாலும், புதிது புதிதாக குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள்” எனப் பேசினார்.
Follow Us