தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க. என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பேரறிஞர் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க.. 

Advertisment

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க. மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க. 

Advertisment

மக்களிடம் செல் என்று அண்ணா சொன்னது போல, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாத கொரோனா காலத்திலும் மக்களிடம் சென்றது. ஆட்சியில் மகத்தான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஐந்தாண்டுகளிலும் மக்களுடனேயே பயணிக்கிறது. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது. 

dmk-mks-mic-speech

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பா.ஜ.க.வும் அதனுடன் இணைந்துள்ள அ.தி.மு.க.வும்  நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான - கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் திமுக முன்னோடிகளும், தொண்டர்களும் பங்கேற்கிறோம். 

Advertisment

என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் திமுக கிளைகள்தோறும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம்” எனத் தெரிவித்துள்ளார்.