இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் இன்று (13.01.2026) கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அக்கடிதத்தில், “அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்கள் தொடர்பாகவும்  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 13.01.2026 அதிகாலையில், இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது. மேலும், தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட, இதுவரை மொத்தம் 83 மீனவர்களும், 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கைவசம் உள்ளனர். 

Advertisment

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையினை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திட வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுத்திட வேண்டும். ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.