தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை நேற்று (25.11.2025) காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். 

Advertisment

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கோவையில் செம்மொழிப் பூங்கா, தலைவரும் தந்தையுமான கலைஞர் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ள கோவையில் செம்மொழிப் பூங்கா இதோ உங்களின் பார்வைக்கு... (வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்)” என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் ஈரோடு மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள், அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Advertisment

இந்நிலையில் இன்று (26.11.2025) காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானின் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்ய உள்ளார். மேலும், சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 605 கோடியில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். அதோடு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் இன்று மாலை, சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவனின் உருவச் சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.