மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாம்களை சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி (02.08.2025) தொடங்கி வைத்தார்.
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்ட மன்றம் தொகுதி கண்டரமாணிக்கம் ஊராட்சியில் நேற்று (27.12.2025) நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்து முகாமில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/28/p-chidamparam-nks-scheme-periyakaruppan-2025-12-28-18-25-32.jpg)
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை நான் பார்த்து மகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று (28.12.2025) வெளியிட்டுள்ள பதிவில், “உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
முழு உடல் பரிசோதனையில், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்க நிலையிலேயே பல இலட்சம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தரச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் உயிர் காத்துள்ளோம். முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயர் துடைத்துள்ளோம். நலம் பெற்றோரின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us